நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா- கனடா உறவை மீட்டெடுப்பேன் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொலையைத் தொடர்ந்து சில காலமாகவே மோதல் போக்கு நீடிக்கிறது. ஏற்கெனவே இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்களை, கனடா திரும்பப் பெற்றது.
தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா, ஹர்தீப் சிங் கொலை குறித்த விவகாரத்தில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தச் சூழலில், கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியேர் போய்லிவ்ரே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘கனடாவிலுள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் இந்துக் கோயில்களில் இந்திய எதிர்ப்பாளர்களின் ஆக்கிரமிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தியா மட்டுமட்டுமல்லாமல், உலக அளவில் கனடாவின் உறவு குழப்பத்தில்தான் இருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் நிர்வாகத் திறமையின்மை, தொழில்முறையற்ற நடத்தை இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு நாட்டுடனும் கனடா சர்ச்சையில் சிக்கியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மற்ற இடங்களில் உள்ளதைப்போலவே, இந்து ஆலயங்களில் சொத்துகள் அல்லது மக்களைத் தாக்கும் எவருக்கும் எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்திய அரசுடன் நமக்கு ஒரு தொழில்முறை உறவு தேவை. மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இரு நாடுகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்தான். ஆனால், எல்லா நாடுகளுடனும் ஒரு தொழில்முறை உறவைக்கொண்டிருக்க வேண்டும். நான் இந்த நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அதைத்தான் மீட்டெடுப்பேன்’ எனப் பேசியிருக்கிறார்.