இரா.சம்பந்தன் அவர்கள் பதவியைத் துறக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரிக்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு  நடைடுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன்.

அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார். 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் ‘  என்று குறிப்பிட்டார்.

அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார். எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தனின் முதுமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.