இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் :பதிவாளர் நாயகம் ஒப்புதல்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் இருந்தனர்.இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் அனுப்பியுள்ளார்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பதற்கு பதிலாக இலங்கை தமிழர் என எதிர்காலத்தில் குறிப்பிடப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட சுற்றுநிரூபத்தால் பாரிய சர்ச்சைகள் எழுந்திருந்ததுடன், மலையக கட்சிகள் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தன. இவ்வாறான பின்புலத்திலேயே பதிவாளர் நாயகம் குறித்த சுற்றுநிரூபத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.