யாழ் வைத்தியசாலை -மறக்கமுடியாத இரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாகக் கழிந்த நிமிடங்கள்.

 

இனமொன்றின் குரல்
நாங்கள் அப்பொழுது வைத்தியசாலையின் கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். எங்களுடன் இருந்த வைத்தியர் கணேசரெத்தினம் அறையை விட்டு அப்போது தான் வெளியே சென்றார் சமநேரத்தில் இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வைத்தியசாலைக்குள் வந்தார்கள்.
வந்த இந்திய இராணுவத்தினர் கதிரியக்கப்பிரிவு, மேற்பார்வையாளர் அலுவலகம் உட்பட வைத்தியசாலை அலுவலகம் எங்கு நுழைந்து சுட கண்ணிமைக்கும் நேரத்தில் சுட தொடங்கினார்கள் ஐயோ ஐயோ என்ற கூக்குரல்கள் முருகா! நல்லூரானே! அம்மாளாச்சி காப்பாற்று காப்பாற்று என எல்லா குல தெய்வங்களையும் கூறி சிலர் கதற தொடங்கினார்கள்
’வி ஆர் சிவிலியன்ஸ், வி ஆர் சிவிலியன்ஸ்’ என்ற சத்தங்களும் சிலவும் கேட்டன.
’ஜயோ என்னைக் காப்பாற்றுங்கோ! என்னைக் காப்பாற்றுங்கோ!’ என்ற, ஒரு பெண்ணின் அவலக்குரல் ஓங்கி ஒலித்து பின்னர் தளர்ந்து அடங்கி விட்டது என்னோடு பணிபுரிந்த ஊழியர்கள் பலரும் கண்மூடித்தனமாக தாக்குதல்களில் என் கண் முன்னால் இறந்து வீழந்து கொண்டு இருந்தார்கள் ஏறத்தாழ ஒரு மணித்தியாலத்தின் பின் பெரிய அளவில் அழுகுரல் சத்தங்கள் கேட்கவில்லை அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும்.
இன்னொரு இடத்தில் கைளை உயர்த்தியபடி ஒருவர் எழுந்து உரக்கக் கத்தினார்: “நாங்கள் அப்பாவிகள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு…அவர் உரத்துச் செல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் மீது ஒரு கைக்குண்டை எறிந்தார்கள்.
அவரும் அவருக்கு அருகில் கிடந்த சகோதரரும் இறந்துபோனார்கள் நடு இரவில் ஒருவர் ’வீ ஆர் சிவிலியன்ஸ் பிளீஸ் டோன்ற் கில் அஸ்’ என சத்தமாகக் கத்தினார்அதைத்தொடர்ந்து குரல்  வந்த பகுதியை அதிரவைத்த குண்டு சத்தமும் தொடர்ந்து கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்ததையும் தொடர்ந்து அந்த மனிதரின் சத்தம் கேட்கவேயில்லை. ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் இந்தியப் படையினரின் காதுகளில் விழுந்தவிடும். அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார்.
அவரது மெல்லிய முனகல்கூட ஒரு இந்தியப்படையினனது காதில் விழுந்துவிட்டது.
ஒரு கைக்குண்டை அவர் மீது வீசி எறிந்தான். அந்த மேற்பார்வையாளரும், அவரது அருகில் கிடந்தவர்களும் பலியானார்கள். இவ்வாறு கோரமான படுகொலைகளுக்கு மத்தியில் இரவு கடந்து போய் காலையாகிவிட்டது.
காலை 8.30 மணியளவில் வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகள் சகிதம் கைகளை மேலே தூக்கிக்கொண்டு “நாங்கள் சரணடைகின்றோம் ‘
நாங்கள் ஒன்றுமே அறியாத வைத்தியர்களும் , தாதிகளும் தான்..என்று உரத்துக்கூறிபடி தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.
இந்தியப் படையினரை வைத்தியர் நெருங்கியதும், அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார்கள் அந்த இடத்திலேயே வைத்தியர் சிவபாதசுந்தரம் துடிதுடித்து வீழ்ந்து இறந்தார்
இதேபோன்று இந்திய இராணுவம் வரும் அறையை விட்டு வெளியேறி சென்ற வைத்தியர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு புறம் பிணமாகக் கிடந்தார்.
நாங்கள் சிலர் அடுத்த நாள் காலை 11 மணி வரை 18 மணித்தியாலங்கள் இம்மி கூட அசையாமல் சடலங்கள் அடியில் படுத்துக் கிடந்து உயிர் பிழைத்தோம் என சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரு பொது மகன் கொடூர படு கொலை நிகழ்வுகளை நினைவு மீட்டினார்.
இந்த கொடூர படுகொலையின் போது 3 வைத்திய அதிகாரிகள் , 2 தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் என 21 வைத்தியசாலை பணியாளர்களையும், 47 நோயாளர்களையும் இந்தியர்கள் கொன்று போட்டார்கள் மறக்கமுடியாத இரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாகக் கழிந்த நிமிடங்கள் நாட்கள் இன்றுவரை நீதி வழங்கப்படாத இப்போது நினைத்தாலும் மனதை உலுக்கும் கோர சம்பவம் இது .