இஸ்ரேல் – ஹமாஸ்தாக்குதல்.! 29 ஐநா ஊழியர்கள் உயிரிழப்பு.!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் , ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. 17வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதல் காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் தான். தற்போது காசா பகுதியில் வசிக்கும் மக்கள், உணவு தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுவரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காசா எல்லைகளில் உள்ள முகாம்களில் வெளியேற்றும் முயற்சியிலும், அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை செய்யும் முயற்சியிலும் ஐநா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐநா நேற்று ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதில் இதுவரை 29 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஐநா கூறுகையில், நாங்கள் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறோம். அக்டோபர் 7 முதல் காசாவில் எங்கள் ஊழியர்கள் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், காசா நகரில் கிட்டத்தட்ட 180 ஐநா ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். 38 ஐநா நிறுவல்கள் (அலுவலகம்) சேதமடைந்துள்ளன என்றும், காஸாவில் எரிபொருள் விநியோகம் இன்னும் மூன்று நாட்களில் தீர்ந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளது.
எரிபொருள் இல்லாமல், தண்ணீர் இருக்காது, மருத்துவமனைகள் செயல்படாது. உணவு தயாரிக்க பேக்கரிகள் இயங்காது. எரிபொருள் இல்லாமல் பொதுமக்களுக்கு உதவிகள் சென்றடையாது என்றும் ஐநா தகவல் தெரிவித்துள்ளது.