இஸ்ரேல்-பலஸ்தீன போர் பதற்றத்தின் மத்தியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா விஜயம்.
இஸ்ரேல்-பலஸ்தீன போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ள பின்புலத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இஸ்ரேல்-பலஸ்தீன போர் 18ஆவது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்தநிலையில் இந்த விவகாரத்தில் சீனா அமைதி காத்துவந்தது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பலஸ்தீன விவகாரத்தில் விரைவில் தீர்வு காண்பதற்கு அரபு நாடுகள் மற்றும் எகிப்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆனால், அப்பாவி மக்களை கொன்ற ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் சீனாவை வலியுறுத்தியதுடன், இஸ்ரேலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ‘தன்னை தற்காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. அதேநேரத்தில், சர்வதேச சட்டங்களை மதிப்பதுடன், அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும். போர் காரணமாக பதற்றம் அதிகரித்து வருவதும், அப்பகுதியில் சூழ்நிலை மோசமாக உள்ளதும் கவலை அளிக்கிறது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், சர்வதேச விதிகள் மீறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்’ என தெரிவித்தார்.
இதனையடுத்து, சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவில் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுதற்காகவே அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது