குண்டுப் புரளி கிளப்பிய 18 பேர் கைது!
அதிகமானோர் இளவயதினர் உள்துறை அமைச்சர் தகவல்.
தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட 1000 சிறுவர்கள் அடையாளம்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகப் போலியான மிரட்டல்களைத் தொலைபேசி மற்றும் ஈமெயில் ஊடாக விடுத்தவர்கள் எனக் கூறப்படும் 18 பேர் கடந்த 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் வயது குறைந்த இளையவர்கள் ஆவர்.
உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா இத்தகவலை நேற்று வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்கு வெளியிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் விமான நிலையங்கள், பாடசாலைகள், அருங்காட்சியகம், வேர்சாய் அரண்மனை போன்ற பல இடங்களில் வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக மக்களை வெளியேற்றிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிலைமை நீடித்து வருகிறது. பல விமான நிலையங்களில் இருந்து நேற்றும் பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டின் வடகிழக்கே அராஸ் என்ற இடத்தில் பாடசாலையில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் புரிந்த படுகொலைச் சம்பவத்தை அடுத்து நாடெங்கும் பாடசாலைகளில் குண்டுப் புரளிகள் அதிகரித்துள்ளன. அதனால் கல்விச் செயற்பாடுகள் குழம்பியுள்ளன.
அநாமதேய மிரட்டல்களை விடுத்த பலரைப் பொலீஸார் தேடிப் பிடித்துக் கைதுசெய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
குண்டுத் தாக்குதல் மிரட்டல்களைப் போலியாக விடுக்கின்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையான சிறையும் முப்பதாயிரம் ஈரோக்கள் முதல் 75 ஆயிரம் ஈரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
இதேவேளை, நாட்டில் சுமார் முப்பது பள்ளிவாசல்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று அடையாளம் கணப்பட்டுள்ளன. எனினும் இஸ்லாமியத் தீவிரவாதம் இணையத்திலேயே பெருமளவில் பரப்பப்படுகிறது-என்று அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா கூறியிருக்கிறார்.
இணைய வழிகளில் இஸ்லாமியத் தீவிரவாதச் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சுமார் ஆயிரம் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.
“தலை துண்டிக்கப்படுகின்ற வீடியோக்களை 11-12-13 வயதுச் சிறுவர்கள் ஏன் பார்வையிடுகின்றனர்? அது பொலீஸாரின் தவறு அல்ல. நாங்கள் ஏற்கனவே கூறியது போன்று பெற்றோரின் ஒருபங்கு தவறும் அதில் இருக்கிறது” – என்று அமைச்சர் விசனம் தெரிவித்தார்.