“ஈரோ ட்ரீம்ஸ்” என்ற பெயரில் புதிய அதிர்ஷ்டச் சீட்டு.
வென்றால் 30 வருடத்துக்கு மாதாந்தம் 20 ஆயிரம் ஈரோ!!
ஐரோப்பிய நாடுகள் மட்டத்தில் புதிய அதிர்ஷ்டச் சீட்டிழுப்பு ஒன்றை“ஈரோ ட்ரீம்ஸ்” (‘EuroDreams) என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பிரான்ஸின் தேசிய லொத்தோ நிறுவனம் (la Française des Jeux – FDJ) அறிவித்திருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோ மில்லியன் அதிர்ஷ்டச் சீட்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பிய நாடுகள் மட்டத்தில் நடத்தப்படவுள்ள புதிய சீட்டிழுப்பு இதுவாகும்.
ஜக்பொட் வெல்லும் அதிர்ஷ்டசாலி பரிசுத் தொகையை (7.2 million euros) மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா என்ற கணக்கில் முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் நடைமுறையை இந்தச் சீட்டிழுப்பு உள்ளடக்குகின்றது. அடுத்தடுத்த நிலையில் பரிசை வெல்பவர்களுக்கும் அதிர்ஷ்டத் தொகை மாதாந்தம் பகிர்ந்து வழங்கப்படும்.
போட்டியாளர்கள் நாற்பது இலக்கங்களில் இருந்து ஐந்து அதிர்ஷ்ட எண்களைத் தெரிவு செய்ய வேண்டும். அத்துடன்“ட்ரீம்ஸ்”(Dreams) எனப்படும் வேறு ஐந்து எண்களில் ஒன்றையும் குறிக்க வேண்டும்.
முதல் இலக்கக் கட்டம் 2.50 ஈரோக்கள் ஆகும்.
வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு தினங்கள் குலுக்கல் இடம்பெறும். இரவு 20.15 மணிவரை சீட்டுக்களை வாங்கலாம். 21 மணிக்கு அவை அதிர்ஷ்டம் பார்க்கப்படும். முடிவுகள் இரவு 22 மணிக்கு இணையத்தில் வெளியாகும். நவம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை முதலாவது சீட்டிழுப்பு நாளாகும். ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இணையத் தளத்திலும் லொத்தோ விற்பனை முகவர்களிடமும் சீட்டுக்களை வாங்க முடியும். ஈரோ ட்ரீம்ஸ் சீட்டிழுப்பில் இங்கிலாந்து உள்ளடக்கப்படவில்லை.