விமான நிலையங்களில் வெடிகுண்டுப் பரிசோதனை!
அநாமதேய மிரட்டல்களால் பயணிகள் வெளியேற்றம், வேர்சாய் அரண்மனையில் மீண்டும் ஏற்பட்ட பதற்றம்
Photo :AFP
Kumarathasan Karthigesu-பாரிஸ்
வெடிகுண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகப் பிரான்ஸின் விமான நிலையங்கள் பலவற்றில் இன்று புதன்கிழமை காலை முதல் பயணிகளை வெளியேற்றித் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
Lille, Bron, Nice, Nantes, Toulouse,Lyon Strasbourg மற்றும் பாரிஸ் நகருக்கு அருகே அமைந்துள்ள Beauvais ஆகிய விமான நிலையங்களுக்கே ஈமெயில் உட்படப் பல வழிகளில் குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. அதனையடுத்துப் பதற்றத்தை ஏற்படுத்தாத விதமாகப் பயணிகளை வெளியேற்றி விட்டு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவினர் விமான நிலையங்களில் சல்லடை போட்டுத் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
அநாதரவான பொதிகள் தொடர்பில் பயணிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் சோதனைகள் முடியும் வரை விமான நிலையங்களது நாளாந்தப் பணிகள் தடைப்பட நேர்ந்தது. பயணிகளும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் உருவாகியுள்ள பதற்ற நிலையை அடுத்து பிரான்ஸில் நாடெங்கும் தாக்குதல் அச்சுறுத்தல் விழிப்பு நிலை பேணப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையிலேயே ஆங்காங்கே பொது இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
பாரிஸ் நகரின் முக்கிய இடங்களான வேர்சாய் அரண்மனை, லூவர் அருங்காட்சியகம் போன்றவற்றில் கடந்த வார இறுதியில் வெடி குண்டு மிரட்டல்கள் காரணமாகப் பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை லூவர் அருங்காட்சியகம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தது. வேர்சாய் அரண்மனையில் கூடியிருந்த பார்வையாளர்கள் நேற்றுச் செவ்வாய்க் கிழமையும் இரண்டாவது தடவையாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அசட்டை செய்துவிட முடியாத பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்தே இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தகவல் வெளியாகியுள்ளன.
அதேசமயம், நாட்டில் உள்ள கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கும் இதுபோன்ற தாக்குதல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அதனால மாணவர்கள் வெளியேற்றப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.