கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் சாட்சியங்கள் இல்லையாம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எனவே இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட போது குறித்த பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
அன்றைய தினமே குறித்த பணம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது, பின்னர் மூன்று வாரங்களின் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டது. எவ்வாறாயினும்இ பணத்தை கையளிப்பதில் பொலிஸாரின் தாமதம் குறித்து விசாரணை நடத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார். கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏன் இந்த விடயத்தை தாமதப்படுத்தினார் என்பதில் சந்தேகம் உள்ளது என்றும் கோட்டை நீதவான் தெரிவித்தார்.