காஸாவில் மருத்துவமனை தாக்கப்பட்டதில் பல நூறுபேர் பலி!
உலகளவில் அதிர்ச்சி மக்ரோனும் கண்டனம், கடும் காவலுடன் இஸ்ரேல் வந்தார் அமெரிக்க அதிபர்
படம் :தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையின் முன்புறப் பகுதி.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிய மனிதப்பேரவலம் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற காஸா பிராந்தியத்தில் உள்ள பிரதான மருத்துவமனை மீது பெரும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே காயமடைந்தவர்களாலும் தஞ்சம் புகுந்தவர்களாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படுகின்ற இத் தாக்குதலால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
போர்க்களமாக மாறிவரும் பகுதியில் மருத்துவமனை தாக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர், பிரான்ஸின் அதிபர் மக்ரோன் உட்படத் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து சிவிலியன்கள் தாக்கப்படுவதற்குத் தங்களது கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றனர்.
அஹில் அராப் என்ற அந்த மருத்துவமனையில் (Ahli Arab hospital) குறைந்தது 200 – 300 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காஸாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற ஹமாஸ் இயக்கம் தெரிவித்திருக்கிறது. மிலேச்சத்தனமான இத்தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்று அது குற்றம் சுமத்தி உள்ளது.
மருத்துவமனையில் நேர்ந்த பெரும் வெடிப்பினால் அதன் பெரும் பகுதிகள் தரைமட்டமானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
குற்றச்சாட்டை மறுத்திருக்கின்ற இஸ்ரேல் ராணுவம், மற்றொரு பலஸ்தீனியக் குழுவாகிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கம் ஏவிய ரொக்கெட் குண்டே தவறுதலாக மருத்துவமனையைத் தாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
படம் :பலத்த பாதுகாப்புடன் ரெல்அவிவ் வான் தளத்தில் தரையிறங்கிய ஜோ பைடன்.
இவ்வாறு இரண்டு தரப்புகளும் மாறி மாறி பொறுப்பை ஒருவர் மீது மற்றவர் சுமத்திவருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
ஆஸ்பத்திரி மீதான தாக்குதல் பலஸ்தீனத் தரப்பின் வேலையே என்ற சாரப்படக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கடப்பாடு இஸ்ரேலுக்கு உள்ளது என்று கூறியுள்ள அவர், அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலின் பக்கமே நிற்கும் என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
இதேவேளை, மருத்துவமனையை நிர்வகிப்பதற்கு உதவி வழங்கி வந்த எல்லை கடந்த மருத்துவர்கள் (Doctors Without Borders – MSF) குழு இஸ்ரேலின் தாக்குதலிலேயே மருத்துவமனையின் சத்திரசிகிச்சைப் பகுதி இடிந்து வீழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
“நாங்கள் சத்திர சிகிச்சைகளை நடத்திக்கொண்டிருந்தோம். திடீரெனப் பெரும் வெடியொலி கேட்டது. சத்திரசிகிச்சைக் கூடத்தின் கூரைப்பகுதி இடிந்து வீழ்ந்தது. இது ஒரு பெரும் படுகொலை “-என்று காஸாவில் உள்ள மருத்துவர் ஹாஸன் அபு சித்தா (Dr Ghassan Abu Sittah) என்பவர் கூறியிருக்கிறார்.