எடப்பாடி பழனிச் சாமியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி: சீமான் பதில்

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்இ,’நாம் தமிழர் கட்சி வளர்ந்து 15வீதம், 20வீதம் வாக்குகளைப் பெறும்போது விசிக, பா.ம.க.வை உள்ளடக்கிய கூட்டணி என்பது சாத்தியம் ஆகலாம். இப்போது எதையும் சொல்ல முடியாது. ஏனென்றால், திருமாவளவன் திமுகவை விட்டு வரமாட்டார்.

அதேபோல், அன்புமணி ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என்றே சொல்ல முடியாது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். அதிமுகவுடனான கூட்டணி குறித்து என்னை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசினார். ஆனால், நான் வர முடியாது. என் கொள்கை முடிவு  இதுதான் என அவரிடம் சொல்லிவிட்டேன். அது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. போதைப் பொருள்கள் விற்பனை அதிமாக உள்ளது. மத்திய அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழக அமைச்சர்கள் மீது சோதனை நடத்துகிறார்கள். இத்தனை ஆண்டு காலம் சோதனை நடத்தாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சோதனை நடத்துவது தான் எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று கூறினார்.