அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், புழல் சிறையில் உள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நீதிமன்ற காவல்  அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.  இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழலில், உடல்நிலை பாதிப்பை கருத்தில்கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  கடந்த 15-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி, ஜாமீன் மனு மீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிபதி ஜெயசந்திரன் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தார்

இந்த வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எஸ் சுந்தரேசன் வாதிட்டார். அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்கி இருந்தார்.  அதன்படி, மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது எனக்கூறி ஜாமீன் வழங்க முடியாது என, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது அவர், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார்.