மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்-எட்டு கட்சிகள் கூட்டாக கோரிக்கை .

பொது முடக்கத்திற்கு  தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை வெளியிட்டனர்.

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் தமிழ் பேசும் மக்களாகிய நாம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நீதி கோரி நிற்கின்றோம்.போர் முடிந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன. இருந்தும் இதுவரையில் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக எமது துன்பங்களும் துயரங்களும் நீடித்து நிற்கின்றன.எம் மீதான அழுத்தங்களும் நெருக்குதல்களும் தொடர்கின்றன. எமது தாயகமான வட-கிழக்கு மாகாணங்களில் எமது பெரும்பான்மைப் பலத்தை சிதைத்து. இருப்பை பலவீனப்படுத்தி. உரிமை கோரி நாம் எழுந்து நிற்க முடியாத நிலைமையை காலப்போக்கில் ஏற்படுத்தும் இலக்குடன் அரசாங்க மட்டத்திலும் – அதன் ஆதரவோடும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது தாயகத்தில்  வரலாற்று ரீதியாக எமது வழிபாட்டு தலங்கள் அமைந்திருந்த பல்வேறு இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகள் மீறப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் குருந்தூர்மலை. திருகோணமலையில் கன்னியா மற்றும் விளையாட்டரங்க சுற்றாடல். யாழ்ப்பாணத்தில் தையிட்டி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில். மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பண்ணையாளர்களின் பல்லாயிரக்கணக்கான கால் நடைகளின் மேய்ச்சல் தரவையாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரிய பிரதேசத்தை சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பொழுது நீதிக்காக துணிந்து நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நேர்ந்திருக்கும் கதி தொடர்பிலும் உண்மை மழுப்பப்பட்டு மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
இந்தச் சூழ்நிலையில் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும் நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும் எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு வட- ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு> வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.