பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய பெண்கள் எழுச்சி நாளும், 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்.
பிரித்தானியா லண்டனில், தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாற்றில் முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 36 வது ஆண்டு நினைவுநாள் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நேற்று ஞாயிற்றுக்கழமை அனுஸ’டிக்கப்பட்டது. இதேவேளை இத்தினம் வீரவணக்க நாளாகவும் நினைவுகூரப்பட்டுள்ளது.
முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி அவர்களும், அதே நாளில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்.கஸ்தூரி, வீரவேங்கை றஞ்சி, வீரவேங்கை தயா, வீரவேங்கை அன்ரன் ஆகியோரின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், இலங்கை – இந்திய படையினரின் கூட்டுச்சதியினை முறியடிக்க சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதிகளான யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல். குமரப்பா, திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல். புலேந்திரன், உட்பட மேஜர் அப்துல்லா, கப்டன் ரகு, கப்டன் நளன், கப்டன் கரன், கப்டன் மிரேஸ், கப்டன் பழனி, லெப். தவக்குமார், லெப். அன்பழகன், 2ம் லெப். ஆனந்தக்குமார், 2ம் லெப். றெஜினோல்ட் ஆகியோரது 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதிகளில் ஒருவரான மன்னார் மாவட்ட தளபதி லெப்.கேணல் விக்ரர், அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் இடம்பெற்றது. இம் மூன்று வீரவணக்க நிகழ்வுகளுடன் ,தமிழீழத் தேசிய பெண்கள் எழுச்சி நாள் சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
தமிழீழப் மண் சர்ந்து விடுதலை சார்ந்து புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய வீர நினைவு சுமந்த இந்த வணக்க நிகழ்வு, பொதுச்சுடரேற்றலுடன் பிரித்தானியக் கொடி, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வின் நாயகர்களான மாவீரர்கள் பற்றிய நினைவுப் பகிர்வுகள் கவிதைகள் இடம்பெற்றன.
தமிழ்த் தேசிய வரலாற்றில் விடுதலைக்கான பாதையை செப்பனிட்ட பெண் போராளிகள் நினைவொட்டி தமிழீழத் தேசிய பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு புதிய எழுச்சிப் பாடலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இளையவர்களின் பங்குபற்றுதலோடும் ஆதரவோடும் நடைபெற்ற இந் நிகழ்வில் இளையோருக்கான பாராட்டும், அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளித்தலும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக உறுதியேற்புடன் தேசியக் கொடியிறக்கம் நடைபெற்று நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.