தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை: 5 தனிப்படைகள் அமைப்பு.!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதாவை இன்று திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் குழந்தையை விற்க முற்பட்டது தொடர்பாக தம்பதியினர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
தினேஷ் – நாகஜோதி தம்பதிக்கு அண்மையில் 3வதாக பிறந்த பெண் குழந்தையை சிகிச்சைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதி அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தொடர்புகொண்டு குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய தூண்டியுள்ளார். இதற்கு மருத்துவர் அனுராதாவும் உடந்தை என்பதை அறிந்த தினேஷ் – நாகஜோதி தம்பதி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் இடைத்தரகர் லோகம்மாள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதா ஆகியோரை உடனடியாக கைது செய்தனர். மருத்துவர் மூலமாக குழந்தைகள் பற்றிய விவரங்களை பெற்று, பின்னர் அவர்களிடம் பேசி குழந்தைகளை பலருக்கு விற்றதாகவும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கைது செய்யப்பட்ட மருத்துவர் அனுரதாவை பணியிடை நீக்கம் செய்தும், விசாரணையை தீவிரப்படுத்தவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகம்மாள் இதுவரை சுமார் 10 குழந்தைகளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விற்றதாக தெரியவந்துள்ளது. இதனால், இந்த குழந்தை விற்பனை விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் விற்றவர்கள் விவரம், வாங்கியவர்கள் விவரம் என பல்வேறு கட்ட விசாரணை மேற்கொள்ள இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.