லெபனானில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ரொய்ட்டர் செய்தியாளர் மரணம்.

ஆயிரக்கணக்கானோர் அவர் உடலுக்கு அஞ்சலி காஸாவில் மாபெரும் இடப்பெயர்வு அவலம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ரொய்ட்டர் சர்வதேச செய்தி நிறுவனத்துக்காக லெபனானில் இருந்து செயற்பட்ட செய்தியாளர் இஸ்ஸாம் அப்துல்லா (Issam Abdallah) இஸ்ரேல் படைகளது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார். அல்-ஜசீரா, ஏஎப்பி நிறுவனங்களைச் சேர்ந்த வேறு சில செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்தனர்.

அவர்கள் பயணம் செய்த வாகனம் செய்தியாளர்களுடையது என்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் இஸ்ரேல் படைகளின் நேரடியான ரொக்கெற் வீச்சுக்கு இலக்கானதாகச் சொல்லப்படுகிறது.

லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் எல்லையோரம் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அதில் செய்தியாளர் சிக்க நேர்ந்தமைக்காக இஸ்ரேலிய இராணுவம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

குண்டு வீச்சுக்கள் ஆரம்பித்தது முதல் அங்குள்ள நிலைவரங்களை அறிவதற்காக ரொய்ட்டர் நிறுவனத்தினால் தெற்கு லெபனானுக்கு அனுப்பப்பட்ட அணி ஒன்றில் இஸ்ஸாம் அப்துல்லா வீடியோப் படப்பிடிப்பாளராக இணைந்திருந்தார். அவர் கொல்லப்பட்டிருப்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாக ரொய்ட்டர் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

லெபனானில் நடந்த இறுதி நிகழ்வில் இஸ்ஸாம் அப்துல்லாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் பத்திரிகையாளர்களும் திரண்டு அஞ்சலி செலுத்திய காட்சிகளை ரொய்ட்டர் வெளியிட்டிருக்கிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்க மோதல் ஆரம்பித்தது முதல் ஏழு நாட்களில் 12 ஊடகவியலாளர்கள் அந்தப் பிராந்தியத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள “பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கின்ற சர்வதேசக் குழு” (Committee to Protect Journalists) – “பத்திரிகையாளர்கள் சிவிலியன்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தி உள்ளது.

இதேவேளை – இஸ்ரேல் படையினர் காஸாப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கானபெரும் போருக்கு கடல்-தரை-ஆகாய மார்க்கமாகத் தயாராகி வருகின்ற நிலையில் கட்டாய இடப்பெயர்வு காரணமாக காஸாவில் பெரும் மனிதப் பேரவலம் தோன்றியுள்ளது.

காஸாவில் வடக்கு எல்லையில் வசிக்கின்ற சுமார் 11 லட்சம் சிவிலியன்களையும் தெற்கு நோக்கி நகர்வதற்கு இஸ்ரேல் விதித்திருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்னமும் அங்கு தங்கியிருப்போர் மிக இயன்றளவு விரைவாக வெளியேறிவிடுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களது வாகன அணிகளால் வடக்கில் இருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் பெரும் சன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்த வீதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அங்குள்ள சர்வதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திவருகின்ற குண்டுத் தாக்குதல்களில் இதுவரை 2,329 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">