சிவநேசத்துரை சந்திரகாந்தன் முட்டாள்தனமான தீர்வை கூறுகிறார் -இரா. சாணக்கியன்.
மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை அபகரிப்பு விவகாரத்தில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முட்டாள்தனமான தீர்வையளிப்பதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேச்சல்தரை அபகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பண்ணையாளர்கள் பொதுமக்கள் சேர்ந்து மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை அபகரிப்பை நிறுத்துமாறு கோரி 31 நாட்களாக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், பல அழுத்தங்களுக்கு பிற்பாடு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் நாங்கள் பண்ணையாளர்கள் கோரிக்கை அவர்களுடைய பிரச்சனைகள் பற்றி தெரிவித்திருந்தோம்.
குறிப்பாக மயிலத்தமடு மாதவனைபகுதியில் சட்டவிரோதமாக குடியேறி அந்த இடத்தில் விவசாயம் செய்வோரை அகற்றுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தோம்.
அந்த இடத்தில் காவல்துறையினர் திடீரென சென்று அகற்ற முடியாது, அவர்களை அகற்ற வேண்டுமென்றால் காவல்துறையினர் பொது சொத்து அபகரிப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவின் ஊடாக அகற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காவல்துறையினருக்கு கூறியிருக்கிறார்.
ஆனால் இதை செய்வதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும் என நான் கேட்டபோது ஒரு இரு நாட்களில் செய்து முடிக்கலாம் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் இக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எங்களோடு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையவர்கள் சிங்களம் தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
குறிப்பாக கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை சொல்லவும் முடியாமல் தாங்களும் கருத்துக்களை கூற முடியாத ஒரு நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.