கொல்லப்பட்ட ஆசிரியருக்கு நாடெங்கும் அஞ்சலி.

கல்லூரிகளில் மதியம் ஒரு நிமிட மௌனம்...

Kumarathasan Karthigesu-பாரிஸ்
 

பாடசாலையில் வைத்து இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் டொமினிக் பெர்னாவுக்கு (Dominique Bernard) அராஸ் நகரில் (Arras – Pas-de-Calais) நேற்று ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். நகரில் உள்ள ஹீரோக்கள் சதுக்கத்தில்(la place des Héros) மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த நிகழ்வில் நகரத்தின் மேயர் ஆசிரியரை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

அஞ்சலி நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக நகரில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட எச்சரிக்கை மணிகள் (warning siren) ஒலிக்க விடப்பட்டன. அங்குள்ள தேவாலய மணியும் துயர சுதியில் ஒலித்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் சாமுவேல் பட்டி கொல்லப்பட்ட பிறகு ஆசிரிய சமூகம் மீண்டும் ஒருமுறை சந்தித்துள்ள அதேபோன்ற ஆழமான பெரும் வலியை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் – என்று நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், உயர்தரப் பாடசாலைகளில் (les collèges et lycées) ஆசிரியர் பெர்னாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு ஒரு நிமிட மௌனம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பாரிஸ் நகரசபை உட்பட உள்ளூராட்சி நிறுவனங்கள் முன்பாகவும் மௌன ஒன்றுகூடல்களை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பல நகரங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடாகி உள்ளன.

படம் :அராஸ் நகரில் நேற்றைய அஞ்சலி நிகழ்வில் திரண்டோர்.

57 வயதான ஆசிரியர் டொமினிக் பெர்னாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவியும் ஓர் ஆங்கில ஆசிரியை ஆவார். பிரெஞ்சு, இலக்கியம், மெய்யியல் போன்ற பாடத் துறைகளைப் போதித்துவந்த அவரது நல்லியல்புகளை சக ஆசிரியர்களும் அவரிடம் பயின்ற மாணவர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

 

பாடசாலை வளாகத்தினுள் கத்தியுடன் பிரவேசித்த தாக்குதலாளியிடமிருந்து பிறரைப் பாதுகாப்பதற்காக அவரை முன்னேற விடாது நீண்ட நேரம் தடுத்து வாதாடிய நிலையிலேயே ஆசிரியர் கத்தியால் கழுத்திலும் நெஞ்சிலும் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்தில் மற்றொரு ஆசிரியரும் பாடசாலைக் காவலரும் படுகாயமடைந்தனர்.

இதேவேளை, தாக்குதலாளியான முகமது மொகேச்கோவ் (Mohammed Moguchkov) பொலீஸ் காவலில் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் விசாரணையாளர்களிடம் எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அவரது தாய், சகோதரி, சிறையில் இருந்த மூத்த சகோதரர் உட்பட குடும்பத்தினர் ஐவர் தடுப்பில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். சம்பவம் தொடர்பாக மொத்தம் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">