லூவர் காட்சியகம் வேர்சாய் அரண்மனை இரு இடங்களுக்கும் குண்டுத் தாக்குதல் மிரட்டல்!
முக்கிய மையங்கள் மூடப்பட்டு பார்வையாளர்கள் அவசரமாக அகற்றப்பட்டதால் பெரும் பீதி!!
Photo :château de Versailles-AP/SIPA
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மிகப் பெரியதும் உலகப் புகழ் பெற்றதுமான பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் (Le musée du Louvre) இன்று சனிக்கிழமை பகல் திடீரென மூடப்பட்டிருக்கிறது.
அருங்காட்சியகத்துக்கும் அதன் பார்வையாளர்களுக்கும் வெடிகுண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கின்ற எழுத்து மூலமான அநாமதேயச் செய்திகள் கிடைத்ததை அடுத்தே அங்கிருந்து பார்வையாளர்கள் அனைவரும் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்ட பிறகு அருங்காட்சியகம் இழுத்து மூடப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவலை லூவர் நிர்வாகம் அதன் உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் (முன்னாள் ருவீற்றர்) வெளியிட்டிருக்கிறது. இன்றைய தினம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடப் பதிவு செய்திருந்தவர்களுக்குக் கட்டணம் மீளளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், பிரான்ஸின் புகழ்பெற்ற வேர்சாய் அரண்மனை (Le château de Versailles) மற்றும் அதன் பூங்காவவனப் பகுதிகளில் இருந்தும் பெரும் எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் இன்றைய பகல் பொழுதில் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
வெடி குண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்தே அரண்மனைப் பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் உட்படப் பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று பாரிஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பாரிஸில் மிக அதிகளவில் உல்லாசப் பயணிகளால் பார்வையிடப்படுகின்ற இவ்விரு முக்கிய மையங்களிலும் இன்றைய தினம் ஏற்பட்ட களேபர நிலைவரத்தினால் பார்வையாளர்கள் பெரும் பீதியடைந்தனர்.
இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்களின் விளைவுகள் பிரான்ஸில் பரவத் தொடங்கியுள்ள பதற்றமான சூழ் நிலையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதேவேளை – பயங்கரவாதத் தாக்குதல்களின் போது செயற்படுகின்ற இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் நாடெங்கும் பாதுகாப்புக் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் மக்ரோன் தலைமையில் நேற்று நடத்தப்பட்ட பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின்னர் எலிஸே மாளிகை இதனை அறிவித்திருக்கிறது.
அராஸ் (Arras – Pas-de-Calais) நகரில் பாடசாலை வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அது போன்ற மேலும் சம்பவங்களைத் தடுப்பதற்காக அரசு நாடு முழுவதும் தாக்குதல் விழிப்பு நிலையை (alerte “urgence attentat”) அறிவித்திருப்பது தெரிந்ததே.
அதனை அடுத்தே பயங்கரவாதத் தாக்குதல் தடுப்புப் பணியில் (Vigipirate) ஈடுபடுகின்ற இராணுவப் பிரிவினரை அரசு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
திங்கட்கிழமை மாலை முதல் மறு அறிவித்தல் வரை அவர்கள் நாடெங்கும் காவல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.