பிரெஞ்சுப் பிரஜைகள் எண்மர் பலி! 20 பேரை காணவில்லை!!
சிக்குண்டோரை மீட்பதற்கு பாரிஸிலிருந்து விமானம்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த சனிக்கிழமை முதல் நடத்திவருகின்ற தாக்குதல்களில் சிக்கிப் பிரெஞ்சுக் குடிமக்கள் எட்டுப் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் இருபது பேர் காணாமற் போயிருக்கின்றனர் என்றும் பாரிஸில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள பிந்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளது கணக்கெடுப்பின்படி இழப்புகள் பற்றிய முதற்கட்ட விவரங்கள் தெரியவந்துள்ளன என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் கத்தரின் கொலொன்னா, (Catherine Colonna), இந்த எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிப்பதற்குச் சாத்தியங்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.
அதேசமயம் , 14 வயதுச் சிறுவன் உட்படப் பிரெஞ்சுப் பிரஜைகள் பலர் ஹமாஸ் தீவிரவாதிகளால் காஸாப் பகுதிக்குப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு திரும்ப முடியாமல் இஸ்ரேலில் சிக்குண்டுள்ள மக்களை ஏற்றி வருவதற்காக விசேட எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை ரெல்அவிவ் செல்லவுள்ளது என்ற தகவலை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.
இதற்கிடையே – ஹமாஸ் தாக்குதல்களில் 14 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதை அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். சிறைப்பிடிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் பல அமெரிக்கப் பிரஜைகளும் அடங்குவர் என்றும் பைடன் இன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
ஹமாஸின் தாக்குதலை”இரத்த வெறி பிடித்த பிசாசுத்தனம் ” என்று வர்ணித்த பைடன், திருப்பித் தாக்குகின்ற கடப்பாடு இஸ்ரேலுக்கு உள்ளது. அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலின் பக்கமே நிற்கும் எனவும் அறிவித்தார்.