பாடசாலையில் கத்திவெட்டு! ஆசிரியர் கொலை! இருவர் படுகாயம்!!

"அல்லாஹூ அக்பர்" எனக் கோஷமிட்ட இளைஞனின் வெறியாட்டம்! அமைச்சர்களோடு மக்ரோன் சம்ப இடத்துக்கு விரைந்தார்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸின் வட கிழக்கே Arras என்ற இடத்தில் பாடசாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உயிரழந்தார். வேறு இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சுமார் இருபது வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் அல்லாஹூ அக்பர் எனக் கோஷம் எழுப்பியவாறு கத்தியால் தாக்கினார் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இளைஞரைப் பொலீஸார் மடக்கிப் பிடித்துத் தடுத்து வைத்துள்ளனர். ஏற்கனவே அவர் இஸ்லாமியத் தீவிரவாதச் செயல்களால் அறியப்பட்டவர் என்றும் தெரிவிக்கப் படுகிறது.

கைதானவர் அந்தப் பாடசாலையின் பழைய மாணவன் என்றும் கூறப்படுகிறது. பகல் 11 மணியளவில் பாடசாலைக்குள் பிரவேசித்த அவர் வரலாற்றுப்பாட ஆசிரியர் யார் என்று கேட்டுத் தேடியுள்ளார்.

lycée Gambetta d’Arras உயர் நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் Arras பகுதியிலும் நாடெங்கிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்கள் காரணமாகப் பிரான்ஸில் யூதர்கள் மற்றும் இஸ்லாமியச் சிறுபான்மையினர் மத்தியில் பதற்றம் நிலவிவருகின்ற சூழ்நிலையில் இவ்வாறு ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய சம்பவத்தை அடுத்து நாடெங்கும் பாடசாலைகளது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் படுவதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிபர் எமானுவல் மக்ரோன் தாக்குதல் இடம்பெற்ற Arras நகரப்பகுதிக்கு உடனடியாக நேரில் செல்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வி உயர் கல்வி அமைச்சர் கப்ரியேல் அட்டால் மற்றும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா ஆகியோரும் அதிபருடன் செல்கின்றனர்.

விசேட பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள், காணொலிகளைச் சமூக வலைத் தளங்களில் பகிர வேண்டாம் என்று பொலீஸார் கேட்டிருக்கின்றனர்.

 

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">