இஸ்ரேல் நிலைவரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் உரை

நெருக்கடிகாலக் கூட்டரசு இஸ்ரேலில் அறிவிப்பு!!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஹமாஸ் தாக்குதல்களை அடுத்து உருவாகியிருக்கின்ற நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக அதிபர் மக்ரோன் நாளை வியாழக்கிழமை சகல கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

எலிஸே மாளிகையில் மதியம் கட்சித் தலைவர்களோடு விவாதம் நடத்திய பின்னர் அவர் நாளை இரவு எட்டு மணிக்குத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் நாடெங்கும் மக்கள் மத்தியில் பல்வேறுவிதமான உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில் – நாட்டில் சுமார் 75 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் பல நாடுகளுக்கும் விரிவடையலாம் என்ற அச்சம் கொண்டிருப்பதைக் கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தி உள்ளன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே அரசுத் தலைவர் மக்ரோன் மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார். இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் நிலைவரம் பிரான்ஸில் பெரும் பதற்றமான புறச் சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது. நாடெங்கும் இஸ்லாமியர்களும் இஸ்ரேலியர்களும் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்த முயன்று வருவதால் வன்செயல் மோதல்கள் வெடிக்கக்கூடிய ஆபத்துநிலை காணப்படுகிறது. யூதர்களது வதிவிடங்கள், பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் போன்றன தீவிர பொலீஸ் கண்காணிப்பின் கீழ் இருந்துவருகின்றன.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட பல் வேறு எதிர்ப்பு நிகழ்வுகளுக்குப் பொலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

எனினும் வரும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமியர்கள் ஆங்காங்கே எதிர்ப்பு ஒன்று கூடல்களை நடத்த முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஆயிரத்து 200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் போர் வெடிக்கக் கூடிய அபாயம் தோன்றியுள்ளது. ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்துள்ள பதிலடி இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைகளைக கடந்து அயல் நாடுகளுக்கும் பரவக் கூடிய ஏதுநிலைகள் தென்படுகின்றன.

லெபனான், சிரியா எல்லைகளில் ஏற்கனவே துப்பாக்கி முழக்கங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலின் பிரதமர் நத்தன்யாகு  நாட்டில் நெருக்கடிகாலத் தேசிய கூட்டரசாங்கம் (“emergency national unity government) ஒன்று அமைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் நாட்டைக் காப்பதற்கான யுத்தத்தை முன்னெடுப்பதற்காகப்” போர்கால அமைச்சரவை (“war management cabinet”) ஒன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.