மலேசியாவில் இலங்கைப் பிரஜைகள் மூவர்  படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியிட்ட மலேசிய பொலிசார்.

மலேசியாவின் செந்தூல் நகரில் மூன்று இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு நிதி விவகாரம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கோலாலம்பூர் பொலிஸ் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித், சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய அறிவுறுத்தியுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உடல்கள் துஷ்பிரயோகம் அல்லது சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை. அதற்கான எவ்வித தடையங்களும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மூச்சுத்திணறலுக்கு உட்படுத்தப்பட்டே அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் பொலிஸ் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இரண்டு பிரதான சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மலேசியாவின் செந்தூல் நகரில் இலங்கையர் மூவர் கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் துரித விசாரணையை மேற்கொண்ட அந்நாட்டு பொலிஸார் இலங்கையர் மூவரும் கொலை செய்யப்பட்ட வீட்டில் தங்கியிருந்த இலங்கை தம்பதியினரை கைதுசெய்திருந்தனர்.எனினும் இவர்கள் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அல்லவெனவும் கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 30ஆம் திகதி அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் அவர்களது வழக்கு இன்று ஒக்டோபர் மாதம் 6ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.