இலங்கை நாடாளுமன்றத்தினுள் அதிரடியாக எழுந்த தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பில் தமிழ் பண்ணையாளர்களின் நிலத்தை இலங்கை அரசின் அனுசரணையுடன் பெரும்பான்மை மக்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இலங்கை நாடாளுமன்றத்தினுள் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனால் நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. எங்கள் மீது தாக்குதல் நடத்தாதே, எமது நிலத்தை எமக்கு திருப்பிக்கொடு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை நடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் எஸ்.ஜே.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணனும் இணைந்திருந்தார். எனினும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மட்டக்களப்புக்கான பயணத்தின் போது இதற்கான தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்றத்தின் தலைவர் சுசில் பிரேமஜயந்தா உறுதியழித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரச்சனையை உள்ளடக்கியதாக இருந்தபோதும் இதில் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்கவில்லை என்பது தமிழ் மக்களின் பலவீனத்தையும், உள்ளக முரண்பாடுகளையும் காண்பிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.