அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் மூட்டைப் பூச்சிகள் விவகாரம் ஆராயப்படும்.
புவி வெப்பம் அதிகரிப்பதால் உருவாகும் புதிய நெருக்கடி,பாரிஸ் கல்லூரியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம்.
பூகோள வெப்பம் உயர்ந்து வருவது ஐரோப்பிய நாடுகளில் புதிய சில பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகிறது. குளிர் காலம் குறைந்து வெப்பம் அதிகரிப்பதால் கரப்பான் பூச்சிகள், மூட்டைப் பூச்சிகள், நுளம்பு இனங்கள் போன்றன பெருகத் தொடங்கியுள்ளன.
பிரான்ஸின் ஊடகங்களில் கடந்த சில நாட்களாக மூட்டைப் பூச்சிகள் பற்றிய செய்திகள் தலைப்புக்கு வந்துள்ளன.
படுக்கை மூட்டைகள்(Bedbugs) என்று அழைக்கப்படுகின்ற குருதி உண்ணும் மூட்டைப் பூச்சிகள் கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் அவதானிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் படுக்கைகள், இருக்கைகள் போன்றவற்றில் மூட்டைப் பூச்சிகள் தோன்றும் காட்சிகளைப் பலரும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதனால் இந்த விவகாரம் நாடெங்கும் மக்களது கவனத்தை ஈர்த்துள்ளது. பயணங்கள் மூலமும் பொது இடங்களில் இருந்தும் மூட்டைப் பூச்சிகள் தங்களோடு தொற்றிக்கொண்டு வீடுகளுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களைப் பீடித்துள்ளது. பிரெஞ்சு மக்களது இந்தக் கவலைக்கு அரசு பதிலளிக்கும் என்று அரச பேச்சாளர் ஒலிவியே வேரன் உறுதியளித்திருக்கிறார். சாத்தியமானதும் விரைவானதுமான தடுப்பு நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்காக வெள்ளிக் கிழமை அமைச்சர்கள் மட்டக் கூட்டம் ஒன்றில் மூட்டைப் பூச்சிகள் விவகாரம் ஆராயப்படவுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். பாரிஸ் மெற்றோ ரயில்களில் மூட்டைப் பூச்சிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளதால் மேலும் பல மில்லியன் பயணிகள் பாரிஸ் நகருக்கு வருகைதரவுள்ள நிலையில் மூட்டைப் பூச்சிகள் விவகாரம் மீது அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது.
பாரிஸ் 12 ஆவது நிர்வாகப் பிராந்தியத்தில் உள்ள Elisa-Lemonnier உயர்நிலைப் பள்ளியில் இன்று வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பமான வேளை மூட்டைப் பூச்சிகளால் குழப்ப நிலை ஏற்பட்டது என்று செய்திகள் தெரிவித்தன. சுத்திகரிப்புப் பணிக்காக மாணவர்கள் ஆசிரியர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். நாட்டின் வேறு சில நகரங்களிலும் பாடசாலைகளில் மூட்டைப் பூச்சிகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.
பாரிஸ் உட்பட உல்லாசப் பயணிகள் அதிகம் வருகின்ற பெரு நகரங்களில் மூட்டைப் பூச்சிகள் தோன்றுவது வழக்கமானதுதான் என்றாலும் சமீப காலங்களில் அவற்றின் சடுதியான பெருக்கத்தை அவதானிக்க முடிகிறது என்று மூட்டை மற்றும் பூச்சி ஒழிப்புப் பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
டெங்கு நுளம்பு, கரப்பான் பூச்சிகள் போன்றனவும் பாரிஸ் நகர வாசிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.