தமிழ் நாட்டில் சாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன: ஆளுனர் ரவியின் கருத்துக்கு  கிளம்பும் எதிர்வினைகள்.

‘தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன.தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆளுநர் ரவி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறார்.

சனாதன தர்மம் போன்ற கருத்துகளைப் பேசி தொடர்ச்சியாக சர்ச்சையைக் கிளப்பிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சாதியப் பதற்றம், தீண்டாமை போன்ற பிரச்னைகளைக் கையிலெடுத்திருக்கிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சாதிப் பாகுபாடு போன்ற பிரச்னைகளை அவர் பேசினார்.தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாதிய வன்கொடுமைகள் எந்த அளவுக்குத் தலைதூக்கியிருக்கிறது என்றால், வேங்கைவயலில் குடிநீரில் மலத்தைக் கலக்கும் அளவுக்கும், நாங்குநேரியில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டும் அளவுக்கும்ம் சாதிய வன்கொடுமை அதிகரித்திருக்கிறது’ என்றார் ஆர்.என்.ரவி.