சர்வதேச விசாரணை இல்லை  என்பதன் ஜனாதிபதியின் முகம் கொடூரமானது-அருட்தந்தை மா.சத்திவேல்.

ஜனாதிபதி சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்ப்பு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக கொடூரமானது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பேட்டி கண்டபோது ஜனாதிபதி அவர்கள் வீதியோர சண்டியன் மற்றும் பாதாள உலக முகத்தையும் வேறும் பல முகங்களையும் வெளிப்படுத்தி உள்ளார். அதில் குறிப்பாக சர்வதேச மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையினை புறந்தள்ளி எந்த விடயம் தொடர்பிலும் சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்ப்பு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக மிக கொடூரமானது என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

எல்லா அரசியல்வாதிகளும் தனது தேர்தல் கால அரசியல் முகத்தினை தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால் இவர் சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றினையும் உள்நாட்டு தேர்தல் வெற்றிக்கான மேடையாக்கி தான் யாருடைய காவலன் என வெளிப்படுத்தியுள்ளார். தமிழர்களே உங்கள் வாக்குகள் இனி எனக்கு வேண்டாம் எனும் செய்தி மிக ஆழமானது.தற்போதைய ஜனாதிபதியே விடுதலை இயக்கத்தை உடைத்த முதல் பிரதானி. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க முன்வைத்த அரசியல் தீர்வு திட்டத்தை நாடாளுமன்றத்திலேயே கொளுத்தியவர்.

இவரே 2009 இனப்படுகொலை பின்னால் உந்து சக்தியாகவும் செயற்பட்டவர். தமது நல்லாட்சி முகத்தோடு ஆணை குழு அமைத்து அரசியல் தீர்வு யோசனைகளை பெற்று நாடகமாடியவர் என்பதனையும் சட்டிக்காட்டியுள்ளார். மேற்குலகின் தெரிவாக இருக்கும் ரணில், ஒரே நேரத்தில் இந்தியாவையும் சீனாவையும் சமாளித்துக் கொண்டு முன் நகர்பவர்; கோத்தாபய ராஜபக்சவை போன்று சிங்கள பௌத்த வாக்குகளோடு தனது ஜனாதிபதி கனவை நினைவாக்க முயற்சிக்கின்றார். இது நாடு அபாயகரமான காலத்தை நோக்கி தள்ளப்படுகின்றது என்பதையே தெளிவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

வடகிழக்கிலும் மலையத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலம் நலமாக அமையப் போவதில்லை என்பதை தமிழ் தலைமைகள் உணர்ந்து, சுகபோக அரசியலுக்கு அப்பால், அரோகரா கோசங்களுக்கு அப்பால் மக்கள் சக்தியை பலப்படுத்தும் கூட்டு முயற்சிக்கு உடன்படல் வேண்டும் .இல்லையெனில் எதிர்காலத்தில் இருப்பதை இழந்து ஒட்டுமொத்த தமிழர்களும் இனமாக அரசியல் ரீதியில் ஆண்டியாக நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். வீதி போராட்டங்களுக்கு அப்பால் அரோகரா கோசங்களுக்கு அப்பால் மக்கள் சக்தியோடு அரசியல் பயணத்தை தொடங்க தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்று கூடி அரசியல் அபிலாசைகள் விட்டு விலகாது பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.