சனாதன ஒழிப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு: உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க  நீதிபதி உத்தரவு.

கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னையில், காமராஜர் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு ‘ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்பி ஆராசா, திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சிக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என சரியாக வைத்துள்ளீர்கள் அதற்கு பாராட்டுக்கள். ஏனென்றால் சனாதானம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய் தொற்று போல ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் பேச்சை பாஜக சமூக வலைதள செயற்பாட்டாளர் அமித் மால்வியா, சமூக வலைதள பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை பதிவிட்டு அதில் நாட்டில் 80 சதவீதம் பெரும்பாலானதாக இருக்கும் மக்களை ஒழிக்க அழைப்பு விடுகிறார் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அடுத்து தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது.பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலைத்தில் புகார்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு பதியபட்டது.இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் எதனடிப்படையில் அவ்வாறு பேசினார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மேடையில் இருக்கிறார். அவர் எந்தவித எதிர்ப்பும் கூறவில்லை. ஒரு மதத்தை பற்றி இழிவாக பேசிவிட்டு எப்படி அமைச்சராக தொடர முடியும் எனவும், எதனடிப்படையில் அமைச்சர் உதயநிதி அவ்வாறு பேசினார் என விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கு ஆதாரமற்ற வழக்கு என தள்ளுப்படி செய்ய அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுகொண்ட நீதிபதி, அமைச்சர் பேசியதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்புக்கு உத்தரவிட்டு வரும் அக்டோபர் 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவை பிறப்பித்தார்.