மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது-அண்ணாமலை.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்படுகிறார். அங்கு பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் தூய்மை நகரம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பல்வேறு நகரங்களில் தற்போது சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தது போல இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள வீதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறைகூவல் விட்டிருந்தார்.
பிரதமரின் அறிவுரைப்படி பல்வேறு மாநிலங்களில் மாநில அரசாங்கமே இது குறித்த நிகழ்வுகளை முன்னெடுத்தது. ஆனால் தமிழக அரசு இதனை முறையாக செய்யவில்லை. தூய்மை நகரம் திட்டத்திற்கு என மத்திய அரசிடம் இருந்து முறையாக வரும் பணத்தை சரியாக செலவு செய்ய வேண்டும். ஏரி போன்ற நீர் நிலைகளை தூய்மை செய்ய வேண்டும். இதனை தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாக மட்டுமே பார்க்க வேண்டும். பாஜக கொண்டு வந்த திட்டமாக பார்க்க வேண்டாம் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
பாஜகவின் சமூக வலைதள பக்கங்கள் பொய் செய்தியை பரப்புகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியது பற்றி செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறுகையில், திமுக தான் சமூக வலைதள பக்கங்களில் பொய் செய்திகளை பரப்புகிறது. பிஜேபி எப்போதும் இளைஞர் நலன் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறது. உலக அளவில் பார்க்கையில் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கம் உலகளாவிய தலைவர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளது. பாஜக சமூக வலைதள பக்கங்கள் அதிகமானவரால் பின்பற்றப்படுவதை வாசிங்டன் பத்திரிக்கைகள் குறிப்பிடுகிறது.
ஆனால், தமிழகத்தில் சமூகவலைதளத்தில் ஏதேனும் கருத்துக்களை பாஜக நிர்வாகிகள் பதிவிட்டு இருந்தால், உடனே கைது செய்து விடுகிறார்கள். நாமக்கலை சேர்ந்த பாஜக சமூக வலைதள நிர்வாகி ஒருவரை கரூர் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். திமுக தான் சமூகவலைத்தள பக்கத்தை தவறாக பயன்படுத்தியது. இது குறித்து பேசுவதற்கு முதலமைச்சருக்கும் தகுதி இல்லை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தற்போது எனக்கு இரண்டு நாள் விடுமுறை இருக்கிறது. இந்த சமயம் நான் ஓய்வு எடுப்பேன். இது அரசியல் ஒரு தலைவர் வருவார். ஒரு தலைவர் போவார். தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பற்றி தேசியத் தலைவர்கள் அறிவிப்பார்கள். ஒரு கட்சி இன்னொரு கட்சியை வேண்டாம் என்று உதறித் தள்ளுவது நல்லது தான். இதனை சரித்திரமாக பார்க்க வேண்டும்
சரித்திரத்தில் நாம் பார்த்தால், சிங்கப்பூரை மலேசியா விடுதலைக்காக துரத்தியது. துரத்தப்பட்ட சிங்கப்பூரின் தற்போதைய GDP, மலேசியாவை விட தற்போது அதிகமாக உள்ளது. இதுவே களநிலவரம். தமிழகத்தின் அரசியல் களநிலவரம் எனக்கு தெரியும். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். சாமானியர்களை தினமும் சந்திக்கிறேன்.
2024 நாடாளுமன்ற தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். 57 சதவீத வாக்காளர்கள் 36 வயதுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்கள் டிவி பார்ப்பதில்லை. டிவியில் நடக்கும் அரசியல் விவாதங்களை பார்ப்பதில்லை. அவர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் செயல்பாட்டில் இருக்கின்றனர். என்னுடைய நோக்கம் அவர்கள்தான் அவர்கள் நலம் சார்ந்தது தான் என்றும் குறிப்பிட்டார்.
மாநிலத் தலைவர் பதவி பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அண்ணாமலை, மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. அதில் உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை. நான் பதவியை தூக்கி போட்டு வந்தவன். இதைவிட பெரிய அதிகாரங்களை நான் கண்டவன். நான் ஓய்வு வேலைகளில் எனது வீட்டு வேலையில் ஈடுபடுவேன். விவசாயம் செய்வேன். எனது உலகம் வேறு. அதேபோல் அரசியல் களத்தில் எனது உலகம் வேறு. அங்கு எனது கருத்தில் இருந்து நான் எப்போதும் பின்வாங்குவது இல்லை.
தமிழகத்தில் பாஜகவின் நிலை அறிய ஒரே ஒரு தேர்தல் போதும். அதில் குறிப்பிட்ட அளவு வாக்கு விகிதத்தை பாஜக தாண்டிவிட்டால் தமிழகத்தின் அரசியல் நிலையே மாறும். இங்கு உள்ள அனைவரும் பாஜகவை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் இந்திய அளவில் தூய்மையான ஒரே கட்சி என்றால் அது பாஜக தான். அதனால் தான் அவர்களுக்கு கோவம் வருகிறது. நான் முழுநேர அரசியல்வாதி அல்ல. யாருமே முழு நேர அரசியல்வாதியாக செயல்பட முடியாது. நான் எப்போதும் விவசாயி என்ற அடையாளத்தை விட்டுக் கொடுப்பதில்லை. பலபேரை எதிர்த்து விட்டேன். இன்னும் சில பேரை எதிர்க்க வேண்டி உள்ளது. என்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.