தமிழக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு.

திமுக அரசு, கர்நாடக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே விஸ்பரூபம் எடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்காக தமிழக அரசானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம், மத்திய அரசு வரை சென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்த 5 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதே போல தமிழகத்திலும், பல்வேறு பகுதிகளில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதனால், தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசு, தமிழக அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், திமுக அரசுஇ கர்நாடக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.