அதிகரிக்கப்பட போகும் மின் கட்டணம்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அமுலாக்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச மின்கட்டண திருத்தம் குறித்து பொது மக்களின் யோசனையை பெற்றுக் கொள்வதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் 2 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த கட்டண திருத்தத்துக்கு பதிலாக அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்துக்கு இணங்க இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, பொது மக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் எழுத்து மூலமாக தங்களது யோசனைகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 18ஆம் திகதி வரையில் அவ்வாறான யோசனைகளை முன்வைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.