பாகிஸ்தான் மசூதி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்.! 52 பேர் உயிரிழப்பு,

பாகிஸ்தானில் பல இடங்களில் முகம்மது நபியின் பிறந்தநாளான மிலாதுன் நபி பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் உள்ள மசூதிக்கு அருகே முகம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரார்த்தனை நடத்த மக்கள் ஒன்றாக கூடியிருந்தனர். அப்பொழுது திடீரென மசூதிக்கு அருகில் வெடிகுண்டு வெடித்துள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பகுதியில் கூடியிருந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 52 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீப காலங்களில் பல பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்ட மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா மசூதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்த மீட்பு மற்றும் காவல்துறையினர் சத்துவ இடத்திற்கு வந்தனர். மீட்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு தற்கொலைப்படை தீவிரவாதி தான் காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராச்சி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தானில் ஒரே மாவட்டத்தில் ஒரு மாதத்தில் குண்டுவெடிப்பு நடப்பது இது இரண்டாவது முறையாகும்.