பள்ளித் துன்புறுத்தல்: மாணவர்களைத் தண்டிப்பதற்கான செயற்திட்டம்.

ஸ்மார்ட் போன் பறிமுதல் இன்ரநெற் பாவிக்கத் தடை பத்தாண்டுகள் வரை சிறை

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸில் பாடசாலைத் துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்ற மாணவர்களைத் தண்டிப்பதற்கான சட்ட விதிகளை அரசு தயாரிக்கவுள்ளது. அவை தொடர்பான தகவல்கள் அடங்கிய செயற் திட்டத்தைப் பிரதமர் எலிசபெத் போர்ன் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடி வதை(ராக்கிங்) போன்று பாடசாலைகளில் இணைய வழிகளில் புதுவகையான துன்புறுத்தல்கள்(harcèlement scolaire) அதிகரித்து வருகின்றன. பிரான்ஸில் சமீப காலமாக வகுப்பறைகளிலும் பாடசாலைச் சூழலிலும் சக மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படுகின்ற உளவியல் ரீதியான வதைகள் காரணமாகப் பள்ளிச் சிறுவர், சிறுமியர் மன ரீதியில் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்கின்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

இதனைத் தடுப்பதற்காக அரசு நீதித்துறை உட்பட சமூகத் தரப்புகளது ஆலோசனைகளைப் பெற்றுத் திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி குற்றமிழைக்கின்ற மாணவர்களைத் தண்டிக்கின்ற பல்வேறு விதிகளை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட மாணவர்களது கைத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்படலாம். அத்துடன் சிறுவர் சட்டங்களுக்கான நீதிபதி ஒருவரது உத்தரவில் குறிப்பிட்ட மாணவன் இணையத் தளத்தைப் பயன்படுத்துவது ஆறு மாதங்கள் வரை தடுக்கப்படலாம். அத்துடன் மிக மோசமான குற்றங்களுக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

பாடசாலைத் துன்புறுத்தலுக்கு ஆளாகுவோரும் அத்தகைய சம்பவங்கள் பற்றி அறிந்த சாட்சிகளும் அதுபற்றி முறைப்பாடு செய்வதற்கு 3018 என்ற இலக்கத்துடன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

ஆரம்ப வகுப்புகளில் இருந்தே மாணவர்களை அவர்களது உளவியல் திறனுடன் சக மாணவர்களை மதித்தும் பரஸ்பரம் உணர்வுகளைப் புரிந்தும் நடக்கத் தயார்ப்படுத்துகின்ற புரிந்துணர்வுப் பாட வகுப்புகள் (des cours d’empathie”) அடுத்த ஆண்டு தொடக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. டென்மார்க் போன்ற நாடுகளில் இவ்வாறான புரிந்துணர்வுப் பாட போதனை (empathy courses) ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">