ஈராக் திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து! 114 பேர் பலி.
ஈராக் நாட்டில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அந்த திருமண விழாவில் பங்கேற்ற 1ooக்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வடக்கு ஈராக்கில் அல்-ஹம்தானியா மாவட்டம் ஹம்தானியாவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கிறிஸ்தவ திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது, திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அங்கு மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதிகளுக்கும் தீ பரவியதால் இந்த விபத்தில் சிக்கி 1ooக்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 150 பேர் தீ காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நினிவே மாகாணத்தில் உள்ள சுகாதாரத் துறை, தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 114 என உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அதிகாரிகளின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
ஈராக்கின் நினிவே மாகாணத்தில் மோசூல் நகருக்கு அருகில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ஹம்தானியா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்து ஏற்பட்டால் சில நிமிடங்களில் அதிக எரியக்கூடிய, குறைந்த விலை கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக மண்டபத்தின் சில பகுதிகள், இந்த விபத்தில் இடிந்து விழுந்தன எனவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்த தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் உள்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளை நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.