சாலேவுக்கும், சஹ்ரானுக்கும் இடையே சந்திப்பு நடந்ததற்கான ஆதாரம் தம்மிடம் இல்லை- சேனல் 4 ஆவணப்பட இயக்குனர்.

ஈஸ்டர் தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காட்டும் காணொளி சமீபத்தில் பிரித்தானியாவின் சேனல் 4 இனால் வெளியிடப்பட்டது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது . இந்த வீடியோவில் சாட்சியாக ஆஜரான மௌலானா ஹன்சீர் அசாத் கூறியபடி, நாட்டின் உளவுத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தற்கொலைப் படைத் தீவிரவாதி சஹ்ரானுக்கும் இடையே சந்திப்பு நடந்ததற்கான ஆதாரம் தம்மிடம் இல்லை என காணொளியின் இயக்குனரும், நிர்வாக தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணப்பட நிகழ்ச்சியில் காட்டப்பட்டுள்ள கலந்துரையாடல் ஜெனிவாவில் நகை வியாபாரியாக பணிபுரியும் இலங்கையின் கண்டியில் இருந்து குடியேறிய ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அவர் தலைமையிலான அரச சார்பற்ற அமைப்பினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஹ்ரானுடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. கூட்டத்தை ஒருங்கிணைப்பதில் அசாத் மௌலானா ஏன் இணைந்தார் என்பதற்கு என்னால் தெளிவான பதிலைச் சொல்ல முடியாது. வெளிப்படையாகச் சொல்வதானால், சஹ்ரானுக்கும் சாலேவுக்கும் இடையில் இதுபோன்ற முன் சந்திப்பு நடந்ததற்கான எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. சாலேவுக்குத் தெரிந்திருக்கலாம். .

சாலே அப்படிப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது.’ என இயக்குனர் டொம் வோர்கர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கிளிப் வெளியாகியுள்ள நிலையில், முக்கிய சாட்சியாக ஆஜரான ஹன்சீர் அசாத் மௌலானா தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் 2022 ஜனவரியில் தங்குமிடக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவியை அசாத் மௌலானாவுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த காணொளியில் தோன்றிய இலங்கையின் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்ஹகே ஊடகவியலாளர் மாநாட்டை அழைத்து, தன்னை ஏமாற்றி குறித்த ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் பெறப்பட்டதாக தெரிவித்திருந்தார்.