நல்லூரில் கொட்டும் மழையின் மத்தியில் தியாக தீபத்தின் நினைவேந்தல்


தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழர் பிரதேசம் எங்கும்  பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும், நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு சென்றடைந்தததும்  யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் சென்றடைந்தன.. நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும், மழையையும் பொருட்படுத்தாது, நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், யாழ்.பல்கலையிலும் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாணவர்களால் சக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.