நன்றி மறந்தவர்கள் அதிமுகவினர்- எச்.ராஜா கடும் விமர்சனம்.!
முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது தனது விமர்சனங்களை முன்வைத்து வந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து இருந்த போதும், கூட்டணிக்குள் இருக்கும் கட்சி குறித்த விமர்சனமானது அதிமுகவினரின் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டது.
இது தொடர்பாக அதிமுக தரப்பில் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், அண்ணாமலை தனது விமர்சனங்களில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடந்த வாரம் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் அதிமுகவுடன் தற்போது கூட்டணி இல்லை என தெரிவித்து இருந்தார். இதனை அடுத்தும் அறிஞர் அண்ணா குறித்த கருத்துகளில் இருந்து அண்ணாமலை மறுப்பேதும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தான் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இத கூட்டம் முடிந்து பேட்டியளித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது என செய்தியாளர்கள் மத்தியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த கூட்டணி முறிவை இரு கட்சியை சேர்ந்தவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிரிந்து கிடந்த அதிமுக கட்சியை சேர்த்தது பாஜக. அதிமுகவால், பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியால் ஒரு சீட்டும் கிடைக்கவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலிலும் சொற்ப இடங்களே கிடைத்தன.
கூட்டணி என்பதால், தினந்தோறும் பாராட்டி கொண்டேவா இருக்க முடியும். அன்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாங்கள் (பாஜக) சேர்த்து வைக்கவில்லை என்றால், அது வெறும் நெல்லிக்காய் மூட்டையாக சிதறி இருந்து இருக்கும். அதனை மறந்தால் அவர்கள் (அதிமுகவினர்) நன்றி மறந்தவர்கள்.
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் எதிர்க்கட்சி திமுகவை கொண்டாட வைக்காமல், உடனடியாக அதிமுகவை சேர்த்து வைத்தது பாஜக. தற்போது வரப்போவது நாடாளுமன்ற தேர்தல். மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக. இதில் அதிமுக எங்கே இருக்கிறது.? அதிமுக இன்றோடு முடிந்தது. கூட்டணி முறிவால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் வராது.
நாளைக்குள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுப்பெற்றது என்ற செய்தி வரும். நாங்க என்னவோ இத்தனை நாள் அதிமுகவை கட்டி போட்டு வைத்திருந்தது போலவு ம், இப்போ எதோ விடுதலை ஆனது போலவும் கொண்டாடுகிறார்கள். இனி கூட்டணி முறிவு பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் (அதிமுக) தான். கொரோனா காலத்தில் மக்கள் உயிரை காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் எத்தனை பேர் நன்றியோடு இருப்பார்கள் என்று வரும் தேர்தலில் பார்க்கலாம் என எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.