தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது: கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு.
மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்து வரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை ஆவணம் கையளிக்கப்பட்டது.எனினும் குறித்த காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.
இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கும் நோக்கில் ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.அத்தோடு திருகோணமலை மாவட்டம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.