இந்தியா-கனடா பிரச்சினை.! பஞ்சாப் பாஜக தலைவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்.!

 

கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. இதற்கு மத்தியில் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் இரு நாடுகளிடையே விரிசலை மேலும் பெரிதாக்கியது. தொடர்ந்து, கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் கனடா அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நாடுகளால் உருவாக்கப்பட்ட “ஃபைவ் ஐஸ்” உளவுத்துறை அமைப்பின் மூலம் பகிரப்படும் தகவல்களில் ஹர்தீப் சிங் கொலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கனடா கேட்டுக்கொண்டது. இந்த பேச்சு வார்த்தை மூலம் சில தகவல்களை கனடா பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களை கனடா அரசு கசியவிட்டுள்ளது.

தற்போது, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை குறித்து பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாகர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், “கனேடியப் பிரதமரின் இந்திய அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கீழ்நோக்கிச் சென்றுள்ளன.”

“பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த அபத்தமான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பிரதம மந்திரி ட்ரூடோவின் கோபத்தை கடுமையாக எதிர்த்ததன் மூலம் இந்திய அரசாங்கம் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது மற்றும் ஆதாரங்களைக் கேட்டுள்ளது, இது வரவுள்ளதாகத் தெரியவில்லை.”

“பிரதமர் ட்ரூடோ தனது முட்டாள்தனத்தை விரைவில் உணர்ந்து, இந்த விவகாரம் சுமுகமான முறையில் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில் விசாக்கள் இடைநிறுத்தத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள் நமது குடிமக்கள் தான். அவர்களில் ஒரு பெரிய பகுதி பஞ்சாபிகள். எங்கள் மாணவர்கள் இந்திய துணைத் தூதரகங்களைத் தொடர்புகொண்டு உதவி பெற ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் எண்ணை நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

“கனடாவில் தங்கள் படிப்புகள் தொடங்குவதற்கு இந்தியாவில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித் திட்டங்களில் அவசரத் தேவையை நான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன். கனடாவில் வசிக்கும் நமது குடிமக்களில் அதிக எண்ணிக்கையில் பஞ்சாபியர்கள் உள்ளனர். இந்த விஷயத்தில் நீங்கள் சமமாக அக்கறை கொண்டுள்ளீர்கள் மற்றும் எங்கள் குடிமக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.