“மத்தியதரைக் கடல் குடியேறிகளது கல்லறையாக மாறியுள்ளது..”

சிறந்த எதிர்காலத்தைத் தேடி வருவோரை நிராகரிக்காதீர்!! மனிதத்தை மதிக்குமாறு கோருகின்றார் பாப்பரசர்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

“கடலில் மூழ்கும் மக்கள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்” என்று கூறியுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், புகலிடம் தேடிக் கடல் கடந்துவருகின்றவர்கள் விடயத்தில் “மனிதத்தை” மதிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

“மோதல்கள், வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து தப்பி வெளியேறுவோர் , ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான தங்களது தேடல் அடியோடு நிராகரிக்கப்படுவதை மத்தியதரைக் கடலில் காண்கிறார்கள்,”

“இந்த அற்புதமான கடல் ஒரு மகத்தான கல்லறையாக மாறியுள்ளது, அங்கு பல சகோதர சகோதரிகள் நல்லடக்கத்துக்கான உரிமை கூட இன்றி உயிரிழக்கிறார்கள்”-என்றும் பாப்பரசர் மன வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரான்ஸின் மத்தியதரைக் கடல் நகரமாகிய மார்செய்க்கு இன்று வருகை தந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அங்குள்ள நோத்த-டாம்-து-லா- கார்ட் பசிலிக்கா (Basilica of Notre-Dame de la Garde) கத்தோலிக்க ஆலயத்தின் குன்றின் உச்சியில் – மத்தியதரைக் கடலை நோக்கிய திசையில் இருந்தவாறு – உரையாற்றினார்.

அவரது உரையைச் செவிமடுப்பதற்காக உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அங்கு திரண்டிருந்தனர். இன்று பிற்பகல் மார்செய்யின் விமான நிலையத்தில் வந்திறங்கிய பாப்பரசரைப் பிரதமர் எலிசபெத் போர்ன் அங்கு சென்று நேரில் வரவேற்றார். பின்னர் பாப்பரசர் அங்கிருந்து நோத்த-டாம்-து-லா- கார்ட் பசிலிக்காவுக்குச் சென்றார். இன்றிரவு

பாப்பரசருடனான விருந்துபசாரத்தில் அதிபர் மக்ரோன் தம்பதிகள் தனிப்பட்ட ரீதியில் கலந்துகொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை சனிக்கிழமை மார்செய் நகரின் வெலோட்ரோம் மைதானத்தில் (Vélodrome stadium) புனித பாப்பரசர் நடத்தவுள்ள பிரமாண்டமான திருப்பலி ஆராதனையிலும் அதிபர் மக்ரோன் கலந்துகொள்வார். தனிப்பட்ட முறையிலான பங்குபற்றல்கள் என்று கூறப்படினும் மதசார்பின்மைக்கு முரணான செயல்கள் இவை என்று இடதுசாரி எதிர்கட்சிகள் தரப்பில் அதிபர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Photo AFP – Andreas SOLARO

ஐரோப்பா நோக்கிக் கடல் கடந்து வருகின்ற குடியேறிகள் மற்றும் ஏதிலிகளை ஏற்றுக் கொள்கின்ற விவகாரம் நாடுகள் இடையே சூடான விவாதங்களைக் கிளப்பியிருக்கின்ற ஒரு தருணத்தில் இடம்பெறுகின்ற புனித பாப்பரசரது மார்செய் விஜயம் மத்திய தரைக் கடலில் மூழ்கி உயிரிழக்க விடப்படுகின்ற குடியேறிகளது அவலம் மீது ஒளியைப் பாய்ச்சியுள்ளது. கடலில் படகு அகதிகளை மீட்கின்ற மனிதாபிமானத் தொண்டுப் பணியில் ஈடுபடுகின்ற அமைப்புகள் பாப்பரசரது வருகையை வரவேற்று மகிழ்ச்சி வெளியிட்டுள்ளன.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் வந்திருந்த இங்கிலாந்து அரசர் சார்ள்ஸ் – கமீலா தம்பதிகள் இன்று தங்கள் விஜயத்தை முடித்துக் கொண்டு போர்தோ நகரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர் புனித பாப்பரசர் மார்செய் நகருக்கு வந்தடைந்தார். அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களது வருகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பேணப்பட்டு வருகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">