கோவையில் நான் போட்டியிட தயாராக உள்ளேன்: கமல்ஹாசன் அறிவிப்பு
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி விவகாரங்கள், சாதகமான தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கமல்ஹாசன், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், எந்த தொகுதியில் ஆதரவு அதிகமாக இருக்கிறது, அந்த தொகுதி அரசியல் கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், தற்போது பல்வேறு இடங்களில் இருந்து கூட்டணிக்கான அழைப்பு வந்து கொண்டு இருக்கிறது. கோவையில் நமக்கு நல்ல வரவேற்பும்இ,ஆதரவும் இருக்கிறது. அதனால் கோவையில் நான் போட்டியிட தயாராக உள்ளேன்.
தாமதமாக அரசியலுக்கு வந்ததுக்கு நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதே கலைஞர் கருணாநிதி என்னை திமுகவில் சேர சொல்லி அழைத்தார் என்று குறிப்பிட்டார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் நாம் தேர்தல் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்டு இருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1500 வாக்குக்கள் எனும் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.