கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி கொலை!
கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கொல்லப்பட்டார். மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாதது. அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு பரப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கல் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல், கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பின் இரு நாடுகளில் உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன.
இந்த நிலையில், கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் விண்ணப்பெக் பகுதியில் கொல்லப்பட்ட சுக்தூல் சிங் மத்திய அரசின் என்ஐஏ அமைப்பால் தேடப்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது. கனடாவில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுக்தூல் சிங் 2017ல் போலி ஆவணம் மூலம் கனடா சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். கனடாவில் ஏற்கனவே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் தீவிரவாதி ஜூன் 19ல் சுட்டுக்கொல்லப்பட்டார். காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றசாட்டியிருந்தார்.
கனடா பிரதமர் குற்றச்சாட்டால் இரு நாடுகள் இடையேயான நட்புறவில் சிக்கல் இருந்து வருகிறது. காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. நட்புறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தூதரக அதிகாரிகளை கனடா, இந்தியா நாடுகள் பரஸ்பரம் வெளியேற்றிய நிலையில், மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யபட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.