குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 31 சிஐடியினருக்கு  திடீர் இடமாற்றம் வழங்கியது ஏன்:எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வழங்கிய சில உத்தரவுகளை விசாரணை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிஐடி முப்பத்தொரு  அதிகாரிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய குறைந்தது 700 அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த உத்தரவுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்.தாக்குதல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் உள்நாட்டு முயற்சிகள் ஊழல் நிறைந்ததாக இருப்பதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை.ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சஹாரான் அரச புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.இந்த அதிகாரியை விசாரிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதையும் விசாரிக்க வேண்டும்.யார் மீதும் சேறு பூசும் தேவைப்பாடு எங்களுக்கு இல்லை. உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் தேவைப்பாடே எமக்குள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும்இஅது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையாக இந்த விவாதம் முன்வைக்கப்பட்டமையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவறுக்கும் சேறு பூசவோ அவமதிக்கவோ அல்ல.இதன் முக்கிய நோக்கமும் குறிக்கோளும் உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டுவருவதாகும்.

இதன் உண்மை மற்றும் இதன் பிரதான சூத்திரதாரிகள் குறித்து முழு நாடும் விழிப்புடன் இருந்து வருவதாகவும்,இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் விழிப்புடன் இருந்து பேசி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.