திருகோணமலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கனடா கடுமையாக சாடியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் திருகோணமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணியில் திலீபனின் உருவத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். சட்டத்தை வெட்கமின்றி மீறுபவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான தண்டனையின்மையை இது பேசுகிறது’ என்று கனேடிய அமைச்சர் கூறினார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹிட் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ராசமாணிக்கம் சாணக்கியன், மனோ கணேசன் உள்ளிட்டோரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது இலங்கை மக்களின் பிரதிநிதி மீது நடத்தப்பட்ட அவமானகரமான தாக்குதல். இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் குண்டர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த வெட்கக்கேடான தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.