சாரதி லைசென்ஸ் பரீட்சையில் பெரும் மோசடி அம்பலம்!
பயிற்சி நிலையம் சிக்கியது 1,400 பேர் குதிரை ஓடிச் சித்தி அனுமதிப் பத்திரங்கள் ரத்து!
பாரிஸ் பிராந்தியத்தில் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் இடம்பெற்றுவந்த பெரும் மோசடியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன்பாகச் சித்தியடைய வேண்டிய “கோட் பரீட்சை” (code de la route) எனப்படுகின்ற தியறிப் பரீட்சையிலலேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
பரீட்சையில் தோற்றாமலேயே சித்திச் சான்றிதழைப் பணம் பெற்றுக்கொண்டு வழங்கி வந்த நிலையம் ஒன்றைப் பாரிஸின் புறநகரப் பிராந்தியமாகிய வல்-து-மானில் (Val-de-Marne-94)அதிகாரிகள் முற்றுகை இட்டுச் சோதனை நடத்தியுள்ளனர். அதன்போது நீண்ட காலமாக அங்கு இந்த மோசடி நடப்பது தெரியவந்துள்ளது.
பரீட்சார்திகளது விண்ணப்பங்கள் இணையத்தின் மூலம் பெறப்பட்டு அவர்களுக்கான சித்திச் சான்றிதழ்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு அந்த நிலையத்தின் முகாமையாளர் சுமார் ஆயிரத்து 400 பேருக்கு முறைகேடாகச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பதும் – அதற்காகத் தலைக்கு 250 முதல் 600 ஈரோக்கள் வரை அறவிட்டிருப்பதும் – அதன்மூலம் அவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஈரோக்களைச் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட முகாமையாளர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர் தான் புரிந்து வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு சாரதிப் பரீட்சையில் தோற்றாமல் முறைகேடாகச் சித்தி பெற்றவர்களது அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும், பணம் செலுத்தி லைசென்ஸ் பெற்றுக் கொண்டவர்களது பெயர் விவரங்கள் சகல பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் பொலீஸ் வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டவிரோத சாரதிப் பயிற்சி நிலையம் தொடர்பான தகவல்கள் கடந்த மே மாதமளவில் ஜொந்தாம் படையினருக்குத் தெரியவந்தது. அயலவர் ஒருவரே இந்த மோசடி குறித்து முதலில் பொலீஸாருக்கு முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
பிரான்ஸில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு 2016 முதல் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.