கிம் ஜொங் உன்னின் குண்டு துளைக்காத பச்சைக் கவச ரயில்! உள்ளே உல்லாச வீடு.
நீண்ட நெடும் பயணமாக ரஷ்யா வந்து திரும்பினார்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மஞ்சள் கோடிட்ட கடும் பச்சை வர்ணம். குண்டு துளைக்காத பெட்டிகள், குண்டு வெடிப்பைத் தாங்கும் தரை அமைப்பு , செய்மதி தொலைத் தொடர்பு வசதி, அவசரத்துக்குப் பயன்படுத்த ஹெலிக்கொப்டர், குண்டு துளைக்காத பென்ஸ் கார்கள், தனியான ஆயுதக் களஞ்சியம், மருத்துவர்கள் அணி, காவலர்கள் படை, அலுவலகம், வரவேற்பு மண்டபம், படுக்கை அறை சீனா, ரஷ்யா, கொரியா, ஜப்பான் நாட்டு உணவுகளை ஓடர் செய்து பெறுகின்ற குசினிகள்.. பிரான்ஸின் பிரபலமான போர்தோ (Bordeaux) மற்றும் பேர்கண்டி (Burgundy) வைன் வகைகள், இளம் பாடகிகள்.. இவ்வாறு ஏகப்பட்ட வசதிகள், சமாச்சாரங்களுடன் கூடிய விசேட கவச ரயில் பற்றிய கதைகள் மீண்டும் செய்தி ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
வடகொரியாவின் இளம் அதிபர் கிம் ஜொங் உன் ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருக்கிறார். இந்த வாரம் உலகில் அதிக கவனத்தைப் பெற்ற செய்தியாக அவரது விஜயம் இருக்கின்றது. வடகொரியாவின் தலைநகராமாகிய பியொங்யாங்கில்(Pyongyang) இருந்து ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியாகிய விளாடிவொஸ்ரொக்கிற்குத்(Vladivostok)தனது விசேட ரயிலில் நீண்ட நெடும் பயணமாக வந்து சேர்ந்திருக்கிறார்.
கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் கிம் நாட்டை விட்டு வெளிநாடு ஒன்றுக்குச் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
வட கொரியாவை ஆண்டுவருகின்ற கிம் பரம்பரையினர் ஏனைய உலகத் தலைவர்களைப் போலன்றித் தங்களது உள்நாட்டு, அயல் நாட்டுப் பயணங்களுக்கு இப்போதும் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். விமானப் பயணங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் அற்றவை என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் ரயில் பயணங்களைச் செய்கின்றனர் என்று கூறப்பட்டாலும் அதிபர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) மட்டுமன்றி அவரது தந்தையார் கிம் ஜொங் இல்(Kim Jong Il) மற்றும் பேரனாரும் வட கொரியாவின் சிற்பியுமாகிய கிம் இல் சுங்(Kim Il Sung) போன்றவர்களும் தங்களது உள்நாட்டுப் பயணங்களுக்கும் எல்லைதாண்டிய விஜயங்களுக்கும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கவச ரயில்களையே கடந்த பல தசாப்தங்களாக ஒரு பாரம்பரியம் போன்று தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கிம் ஜொங் உன்னின் தந்தையார் கிம் ஜொங் இல் 2011 இல் ஒரு ரயில் பயணத்தின் இடை நடுவிலேயே மாரடைப்பினால் உயிரிழந்திருந்தார். இன்றைக்கும் அவரது நினைவுச் சமாதியில் ரயில் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கிம் ஜொங் உன் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரது விசேட பச்சை ரயிலின் ஆச்சரியமான அம்சங்கள் பற்றிய செய்திகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இராணுவ வாகனங்கள் போன்று மூடிய கவச உலோகத்தினால் வடிவமைக்கப்பட்ட அந்த ரயிலின் பெட்டிகளது எடை காரணமாக அதன் வேகம் மணிக்கு 45 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதிபர் கிம் மெதுவான பயணங்களை இதமாக ரசிப்பவர் என்று சொல்லப்படுகிறது..
ரஷ்யாவோடும் சீனாவோடும் எல்லையைப் பகிர்ந்துள்ள நாடு வடகொரியா. இந்த விஜயத்தின் போது கிம் தலைநகர் பியொங்யாங்கில் இருந்து ரஷ்யாவின் தூர கிழக்கான விளாடிவொஸ்ரொக்கிற்கு சுமார் ஆயிரத்து 200 கிலோ மீற்றர்கள் தூரத்தைத் தனது பிரத்தியேக ரயிலில் பயணித்துக் கடந்துள்ளார்.
ரஷ்ய விஜயத்தின் போது அவர் வொஸ்ரொச்சினி என்ற இடத்தில் உள்ள ரஷ்யாவின் விண்கலத் துறைமுகத்தில் (Vostochny spaceport) அதிபர் புடினோடு மிக அந்நியோன்னியமாக நடத்திய சந்திப்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
விளாடிவொஸ்ரொக்கில் நேற்று சனிக்கிழமை அவர் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து அவரோடு ஹிப்பர்சோனிக் ஏவுகணைத் தொகுதிகள் (hypersonic missile system) உட்பட நவீன போர் ஆயுதங்களைப் பார்வையிட்டார்.
ஆறு நாள் ரஷ்ய விஜயத்தின் முடிவில் கிம் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது கவச ரயிலில் தூர கிழக்கில் இருந்து வட கொரியா திரும்பினார். உள்ளூர் ரயில் நிலையம் ஒன்றில் அவரை வழியனுப்பி வைக்க நடந்த நிகழ்வில் இரு நாடுகளது தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. கிம் ஜொங் உன்னுக்கு அந்தப் பிராந்தியத்தின் ஆளுநர் அப்போது ஐந்து வெடிக்கும் ட்ரோன்களையும் (explosive drones) , ஒரு உளவு ட்ரோனையும் (reconnaissance drone) குண்டு துளைக்காத மேலாடை (bulletproof vest) ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இன்னொரு இடத்தில் வெப்ப அலைக் கமெராக்களில் (thermal cameras) சிக்காதவிதமான விசேட ஆடைகளையும் ரஷ்யா அவருக்குப் பரிசளித்துள்ளது.