கனடா சீக்கியர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது!

ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு ,புதுடில்லியுடன் பதற்ற நிலை,தூதரகத்துக்கு பாதுகாப்பு

 

Kumarathasan Karthigesu-பாரிஸ்

சீக்கியப் பிரிவினைவாத இயக்கத் தலைவர் எனச் சந்தேகிக்கப்படுகின்ற கனெடியப் பிரஜையாகிய ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பரது கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட கருத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர மட்டத்தில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கி உள்ளது.

இரு நாடுகளும் மாறிமாறி ராஜதந்திரிகளை வெளியேற்றி வருகின்ற அதேவேளை, புதுடில்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

50 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றுக்கு வெளியே வைத்துக் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரது கொலக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆயிரக்கணக்கான சீக்கிய இனத்தவர்கள் வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு வெளியே திரண்டனர். சுரே என்ற இடத்தில் நடந்த அவரது மரணச் சடங்கில் திரண்டு பங்குபற்றிய சீக்கியர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தான் ஹர்தீப் சிங் கொலையுடன் இந்தியாவைத் தூண்டிவிடுவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் ஆனால் அவரது மரணத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான “நம்பகமான குற்றச்சாட்டுகளைக்” கனெடிய உளவுத் துறையினர் பின்தொடர்ந்து வருகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் இந்திய இதனை அதிக சிரத்தையுடன் கவனத்தில் எடுக்க வேண்டும் – என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது, அவை “அபத்தமானவை” மற்றும் “அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்று விவரித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்குக் கனடா நீண்டகாலமாக அடைக்கலம் அளித்து வருகின்றது என்றும் புதுடில்லி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை அடுத்து இந்தியத் தூதரகத்தின் ராஜதந்திரி ஒருவரை வெளியேற்றுவதாகக் கனடா வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. அதற்குப் பதிலடியாக மூத்த கனெடிய ராஜதந்திரி ஒருவரை இந்திய அரசு வெளியேற்றியது.

கனடாவின் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கவலை கொண்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வாழும் சீக்கிய இனத்தவர்கள் காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு கோரி நீண்ட காலம் போராடி வந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த சீக்கிய மக்கள் கனடாவில் குடியேறி வசித்துவருகின்றனர்.