பரிசுத்த பாப்பரசர், மன்னர் சார்ள்ஸ் வருகையை ஒட்டிப் பாதுகாப்புத் தீவிரம்.

இந்த வாரத்தில் பல முக்கிய நிகழ்வுகள்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ் தனது துணைவியார் ராணி கமீலா சகிதம் மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் புதன்கிழமை பிரான்ஸ் வருகிறார். பாரிஸிலும் போர்தோ நகரிலும் பல்வேறு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதேசமயம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நடத்தவுள்ள பிரமாண்டமான திருப்பலி ஆராதனை மார்செய் நகரத்தில் வெலோட்ரோம் மைதானத்தில் (Vélodrome stadium) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அந்தக் கத்தோலிக்க மத நிகழ்வில் அதிபர் மக்ரோன் – பிரிஜித் தம்பதிகளும் பங்கேற்கின்றனர்.

இந்த முக்கிய நிகழ்வுகளை ஒட்டி ஆயிரக்கணக்கான பொலீஸார் மற்றும் ஜொந்தாம் படையினர் வழமைக்கு மாறான விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

பாப்பரசரது வருகை, மன்னரது விஜயம் ஆகியவற்றை முன்னிட்டு அவர்கள் பங்கேற்கின்ற நிகழ்வுகள் நடைபெறும் சகல பகுதிகளிலும் பலத்த பொலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. மன்னர் சார்ள்ஸ் பாரிஸ் நகரில் பயணிக்கும் இடங்களில் பொதுமக்களையும் நெருங்கிச் சந்திக்க உள்ளதால் நகரில் பொலீஸ் கண்காணிப்புக்கள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இவ்விரு விஜயங்களும் ரக்பி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு மத்தியில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே இந்தப் போட்டிகளை ஒட்டிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் எதிர்வரும் சனிக்கிழமை பாரிஸிலும் வேறு சில நகரங்களிலும் பொலீஸ் வன்முறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடாகி உள்ளன.

பதற்றம் நிறைந்த இந்த வாரத்தில் குழப்பங்கள் மற்றும் வன்முறைகள் நேர்ந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு உயர் மட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

சார்ள்ஸ் மன்னராகப் பதவியேற்ற பின்னர் பிரான்ஸுக்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயம் இதுவாகும். விமானம் மூலம் புதன் கிழமை பாரிஸை வந்தடையவுள்ள மன்னரும் ராணியும் வெள்ளியன்று ரயில் மூலம் இங்கிருந்து போர்தோ செல்கின்றனர்.

கடந்த மார்ச்சில் மன்னரது விஜயம் ஏற்பாடாகியிருந்த சமயத்தில் பாரிஸில் ஓய்வூதியச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான பெரும் கலவரங்கள் வெடித்திருந்தன. அதனால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டமை தெரிந்ததே.