பாரிஸில் உள்ள ஓர் அமைச்சகத்தைத் தாக்கப்போவதாக அல்கெய்டா மிரட்டல்!

ஜிஹாதிகள் சஞ்சிகையில் சுவீடன், டென்மார்க்குக்கும் விடுக்கப்பட்டது எச்சரிக்கை

Kumarathasan Karthigesu-பாரிஸ்

அரேபியக் குடாவில் செயற்படுகின்ற அல்-கெய்டாக் குழு (group Al-Qaeda in the Arabian Peninsula – AQAP) பிரான்ஸ், சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகள் இஸ்லாத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளன என்று குற்றம் சுமத்தும் பதிவு ஒன்றை “சதா அல் மலாஹிம்” (Sada al-Malahim) என்ற அதன் பிரச்சாரச் சஞ்சிகையின் பிந்திய பதிப்பில் வெளியிட்டுள்ளது. அதில் பாரிஸில் உள்ள அமைச்சகம் ஒன்றைத் தாக்கப் போவதாக அக்குழு மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆபிரிக்காவில் யேமன் நாட்டைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற அல்கெய்டா குழுவின் இந்த மிரட்டல் செய்தி வட்ஸ்அப் (WhatsApp) ரெலிகிராம் (Telegram) உட்படப் பல சமூக ஊடக வலைத் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் இறைவனுக்கும் இறை தூதருக்கும் எதிரான பந்தயத்தில் முன்னின்று செயற்பட்டு வருகின்ற அதேசமயம் இஸ்லாத்துக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான போரைத் தலைமையேற்று நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் சுவீடன் தன்னை முன்னிலைப்படுத்தித் தெரிவுசெய்திருப்பது தற்போது தெட்டத் தெளிவாகியுள்ளது… “

-இவ்வாறு அந்த அல்கெய்டா பிரச்சாரச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பொலீஸார் கண்ணீர் வடிப்பது போன்று சித்திரிக்கப்பட்ட காட்சி ஒன்றின் முன்னால் முகத்தை மூடியவாறு துப்பாக்கியுடன் தோன்றும் நபர் ஒருவர், “.. பெற்றோரது கட்டுப்பாட்டின் கீழ் வளர்ந்து வருகின்ற முஸ்லீம் சிறுவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்.. ” என்று கூறுவது போன்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ‘அபாயா’ எனப்படும் உடலை முழுமையாக மறைக்கின்ற உடையைப் பாடசாலைகளில் அணிவதற்கு பிரான்ஸின் அரசு தடைவிதித்திருப்பது தெரிந்ததே. அதன் பிரதிபலிப்பாகவே அல்கெய்டா குழுவின் இந்த எச்சரிக்கை வெளியாகி இருப்பதாக நம்பப்படுகிறது.

அல்கெய்டா குழுவின் கூற்றின் படி – பிரெஞ்சு அல்லது சுவீடிஷ் மண்ணின் மீதான தாக்குதல் மட்டுமே அந்த நாடுகளை எதிர்வினையாற்ற வைக்கும்.”சுவீடிஷ் தூதரகம் பெரும் குண்டு வெடிப்பில் தரைமட்டமாக்கப்பட்டது” அல்லது “பாரிஸில் அமைச்சகத்தின் மீது ஆயுதமேந்திய தாக்குதல்” போன்ற செய்திகளைக் கேட்கும் வரை அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் அல்லது கவனிக்க மாட்டார்கள்.”

-இவ்வாறு மறைமுகமான தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அல்கெய்டாவின் ஆயுதக் குழுக்கள் இவை போன்ற மிரட்டல்களை அடிக்கடி விடுப்பது வழமையே என்றாலும் ஆகப் பிந்தி வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கையைப் பிரான்ஸின் பாதுகாப்பு நிபுணர்கள் அதிக கவனத்தில் எடுத்துள்ளனர் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.

பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் மிக பலமாக உள்ளது – என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அண்மையில் மதிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இருக்கின்ற நிலையில் நாட்டின் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான கவலைகள் எழுந்துள்ளன.

சுவீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அண்மையில் முஸ்லீம்களது புனித நூலான குரான் பிரதிகள் எரியூட்டப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அதனையடுத்து இவ்விரு நாடுகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்திருந்தது. இரண்டு ஸ்கன்டிநேவியன் நாடுகளும் தங்களது எல்லைகளில் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருந்தன. குரான், பைபிள் போன்ற புனித நூல்களை எரிப்பதைத் தடைசெய்கின்ற சட்ட மூலம் ஒன்றை விரைவில் வரையப் போவதாக டென்மார்க் அறிவித்திருந்தது.